கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

ஆசையாய்
அடம்பிடித்து வாங்கிய
மயில் கழுத்து பார்டரில்
தாழம்பூ தவழும்
பட்டுப் பாவாடை
பத்திரமாய்த்
தூங்குகிறது பெட்டியில்.
பலவித பலகாரங்களைப்
பட்டியலிடுகிறாள் அம்மா
என்னை
பட்டினி போட்டுவிட்டு....
அடிவயிற்றில்
பிசையும்
வலியோடு அவளை
அணைத்து அழ
நெருங்குகையில்
'தொடாதே...
தீட்டு ஒட்டிக்கும்'
என்கிறாள் கோபமாக!
அப்பா முதுகில்
உப்பு மூட்டை தொங்கியபடி
பழிப்புகாட்டி
சிரிக்கிறாள் இன்னும்'
பருவமெய்தாத் தங்கை.
கருகும் பூக்களென
கைப்பட்டாலென
செடிக்கு நீரூற்றும் உரிமையும்
மறுக்கபடுகிறது எனக்கு.
சனி மூலை, அக்னி மூலை
தெற்கு மூலை, குபேர மூலை
என எந்த மூலையிலும்
எனக்கோர் இடமின்றி
தள்ளப்படுகிறேன்
வீட்டுக்கு வெளியே.
பொம்பளத் தீட்டு
அம்மனுக்கு ஆகாதாம்.
அம்மனும் பெண்தானே....
அப்புறமென் ஆகாது?
தனிமை மட்டுமே
துணையிருந்த இரவில்
இடி சத்தத்துக்கும்
பூனையின் அலறலுக்கும்
பயந்து
தூக்கம் தொலைத்த
இரவின் மறுநாள்
இரும்பு துண்டை நீட்டி
அம்மா சொன்னாள்...
'வெச்சுக்க... இல்லேன்னா
பேய் பிடிச்சுடும்!'
வேகமாய்
வீசி எறிகிறேன் அதை.
கோபமென அவள்
நினைத்திருக்க கூடும்.
உண்மையில்,
பேய்காவது என்னைப்
பிடிகட்டுமே என்கிற
நப்பாசைதானே தவிர
மற்றபடி
வேறொன்றும் இல்லை!.
- சுமதி பெனடிக்ட்

"ரொட்டிக்காக என்குபவனை விட அன்புக்காக ஏங்குபவன் நிலை பரிதாபத்துக்குரியது...."
- அன்னை தெரசா

கேள்வி: நல்லவர்களை எளிதாக அடயாளம் காண ஒரு வழி சொல்லுங்கள்?
பதில்: மாசக் கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள்.......!!!!

"இறுதியில் மிஞ்சி இருபது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!"

"கி,ராஜநாராயணனின் 'கதவு' என்ற சிறுகதையில் இருந்து - ஒரு விவசாய கூலி தந்தைக்குப் பிறந்த கிராமத்துக் குழந்தைகள். அவர்கள் வீட்டுக் கதவு தான் அவர்களுக்கு பஸ், ட்ரெயின் எல்லாம். அந்த கதவில் ஏறிக் குழந்தைகள் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வருவது, வெளியே இருந்து உள்ளே போவதிலுமாக....அந்த விளையாட்டு பயணத்தின் அப்படி ஒரு மன நிறைவு. குதூகலம், கொண்டாட்டம்! கதையின் இறுதியில் தந்தை வங்கியில் வாங்கிய கடனை கட்டாததினால், வங்கி அதிகாரிகள் வீட்டு கதவை மட்டும் ஜப்தி செய்துவிடுவார்கள். தங்களுக்கான கதவுலகத்தை இழந்து கலங்கி நிற்பார்கள் குழந்தைகள். இதேபோல் கிராமத்து நண்பர் ஒருவர், பல வருடங்களாக தன் வீட்டில் இருந்த பூவரசு மரத்தை வெட்டி இருக்கிறார், அவரது குழந்தையோ மரத்தை வெட்ட கூடாது என்று ஓவென அழுதிருக்கிறது . 'நான் உனக்கு இந்த மரத்தில் பம்பரம் செய்து தருகிறேன் ' என்று சமாதானம் சொல்லி மரத்தை வெட்டி இருக்கிறார். "
வளர்ந்த மனிதர்களின் பிரச்சனைகளும் தேவைகளும் குழந்தைகளுக்கான உலகத்தைச் சிதைத்துக்கொண்டு இருக்கிறது என்பது தான்உண்மை - சா.தூரன், திருநெல்வேலி

பாபா,
உன் ஆடுகளை விற்றுத்தான்
நீ என்னைப் பார்க்க வர முடியும்
என்ற தொலைதூரத்தில்
என்னைக் கட்டிகொடுக்காதே.
எண்ணங்களை விட கார்கள்
வேகமாகப் பறக்கும் இடத்தில்
உயர் கட்டடங்களும்
பெரிய கடைகளும்
உள்ள இடத்தில் வேண்டாம்.
நீ காலையில் வந்து
அஸ்தமன நேரத்தில் நடந்தே
தீரக்கூடிய இடத்தில்
எனக்குத்
திருமணம் செய்து வை.
இங்கே நான்
ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில் பட்டு
நீ வர வேண்டும்!...
- நிர்மலா புதின்

எறும்பை நசுக்கிவிட்டாய்
வாயில் இருந்த சிறுதீனி
தன குழந்தைகளுக்கு
எடுத்துபோனதோ
என்னவோ?
- முத்துவேல்